Please Enter Bible Reference like John 3:16, Gen 1:1-5, etc
ஏசாயா - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66
Bible Versions
Bible Books
பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு: பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு: ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர்.
உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு: உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு: உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டி விடு: உன் முளைகளை உறுதிப்படுத்து.
வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்: உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக் கொள்வர்: பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர்.
அஞ்சாதே, நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்: வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்: உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்: உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்கமாட்டாய்.
ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர்,”படைகளின் ஆண்டவர்” என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்: “உலக முழுமைக்கும் கடவுள்” என அவர் அழைக்கப்படுகின்றார்.
ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள்.
நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்: ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.
பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்: ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.
எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது: நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்: அவ்வாறே உம்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.
மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது: என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.
துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன்.
உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன்.
உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்: உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர்.
நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்: ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்: நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.
எவர்களாவது உன்னை எதிர்த்துக் கூடினால் அவர்கள் என்னிடமிருந்து வந்தவர்கள் அல்லர்: உன்னைத் தாக்கவரும் எவனும் உன் பொருட்டு வீழ்ச்சியுறுவான்.
இதோ, கரிநெருப்பை ஊதிப் போர்க் கருவியை அதன் பயனுக்கு ஏற்ப உருவாக்கும் கொல்லனைப் படைத்தவர் நான்: அதைப் பாழாக்கி அழிப்பவனையும் படைத்தவர் நான்.
உன்னைத் தாக்குமாறு உருவாக்கப்பட்ட எந்தப் போர்க்கருவியும் நிலைத்திராது. உன்மேல் குற்றஞ்சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும் எந்த நாவையும் நீ அடக்கிவிடுவாய்: இவையே ஆண்டவரின் ஊழியர்களது உரிமைச்சொத்தும். நான் அவர்களுக்கு அளிக்கும் வெற்றியுமாய் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.